Friday, October 22, 2010
அஹம் ப்ரஹ்மாஸ்மி வின் மகிமை !
ப்ரஹ்ம வா இதுமக்ர ஆஸீத், ததாத்மானமேவாவேத்
அஹம் ப்ரஹ்மாஸ்மீதி தஸ்மாத் தத் ஸர்வம்பவத் !
- ப்ரஹதாரண்யகோபநிஷத்.
முதலில் இதெல்லாம் பிரம்மமே ஆகியிருந்தது. அது தன்னை " அஹம் ப்ரஹ்மாஸ்மி ", நான் பிரம்மமாய் இருக்கிறேன் என்று அறிந்துகொண்டது. அதிலிருந்து அது எல்லாமும் ஆகிவிட்டது.
அஹம் ப்ரஹ்மாஸ்மி, இது ஒரு மகாவாக்கியம். சுக்ல யஜுர்வேதத்தில் ப்ரஹதாரண்யக உபநிஷத்தின் சாரமாகிய இந்த அஹம் ப்ரஹ்மாஸ்மி மந்திரம் ஜீவ பிரம்ம ஐக்கியத்தை உபதேசிக்கிறது. ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம, அஹம் ப்ரஹ்மாஸ்மி, தத்வமஸி, அயமாத்மா ப்ரஹ்ம இந்த 4 வாக்கியங்களும் வேதாந்த மகாவாக்கியங்கள் என்று புகழ் அடைந்துள்ளன. அவித்யையினால் உண்டான ஜீவன் நான் என்ற தவறான எண்ணத்தை நீக்கி ' நீயே பிரம்மம் ' என்று இம் மந்திரங்கள் உபதேசிக்கின்றன.
அஹம் ப்ரஹ்மாஸ்மி, 'அஹம்' என்றால் நான், ' ப்ரஹ்மாஸ்மி ' என்றால் பிரம்மமாய் இருக்கிறேன் என்று பொருள். நான் ஜீவன் அல்ல, ஜீவபாவம் அறிவித்தையினால் கற்பிக்கப் பட்டது. பிரம்ம சொரூபம் ஜீவனின் தன்மையும் உண்மையும் ஆனது. இதை அறிவதே முக்தி. இதை வேதாந்தவிசாரத்தின் மூலம் மட்டுமே அறியலாம்.
எப்பொழுதும் பிரம்மம் ஒன்றே
சித்ரூபமும், சத்ரூபமும் ஆன இரண்டில்லாத ஒன்றாகிய பிரம்மம் தான் முதலில் இருந்தது, இப்போதும் அந்த பூர்ணமாகிய பிரம்மமேதான் இருந்துகொண்டிருக்கிறது.
சூன்யத்திலிருந்து இந்த ஜகம் பிறக்க முடியாது. சத்திலிருந்துதான் ( ஸத் ) பிறந்திருகிறது. " ஸத் " என்றால் இருக்கக்கூடியது என்று அர்த்தம், இத்ற்குத்தான் " பிரம்மம் " என்று பெயர். இந்த இரண்டுமில்லாததாகிய ( அத்விதீயம் ) பிரம்மம்தான் முதன் முதலில் இருந்தது, இதனுடன் வேறு எதுவும் இருக்கவில்லை.
சத் ( ஸத் ) சொரூபமாகிய பிரம்மத்தில் ஒரு இனத்தைச் சேர்ந்த பல ரூபங்களே ( ஸ்ஜாதீய பேதம் ), வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவைகளோ ( விஜாதீய பேதம் ), உள் வேளி வேறுபாடுகளோ ( ஸ்வகத பேதம் ) இலவே இல்லை. பிரம்மம் இரண்டு இல்லாத பரிபூரணத் தத்துவம். உண்மையில் இப்பொழுதும் பிரம்மம் பரிபூரணமாகவே இருக்கிறது. எந்த விசேஷங்களும் இல்லை. எப்படி சமுத்திரத்தையே அலைகள், நுரைகள், குமிழ்கள் என்பதுபபோல் பரப்பிரம்மத்தைத்தான் அஞ்ஞானிகள் ஜகம் ( உலகம், அண்டம் ) என்கிறார்கள். இருக்கக் கூடிய பரப்பிரம்மம் ஒன்றே.
தன்னை நிருபாதிகமாகிய பிரம்மம் என்று எவன் தெரிந்து கொள்கிறானோ அந்த தீரன் சர்வாத்மபாவத்தை அடைகிறான். " நான் பூர்ணணாகிய பரமாத்மனும் சனாதனனும் அம்ருதனும் ஆகியிருக்கிறேன் " என்று ஒரு பிரம்மஞானி தயிரியமாகச் சொல்கிறான்.
" ஓ மனிதர்களே, நீங்கள் இந்த ஆத்மனைத் தெரிந்து கொண்டு அம்ருதாத்மர் ஆகுங்கள், ஆத்ம ஞானத்திலிருந்தே முக்தி, வேறு வழியே இல்லை ", இது பரப்பிரம்மத்தை தன்னுடைய சொரூபம் என்று தெரிந்துகொண்ட ஒரு மகரிஷியினுடைய ஆனந்த உத்காரம் ( அறைகூவல் ).
ஆத்மனே அதிகப் பிரியமுள்ளவன்
புத்திரன், செல்வம், பத்தினி என எல்லோரையும் விட ஆத்மனே எல்லோருக்கும் பிரியமாக இருக்கிறான் அல்லவா ? அனால் இந்த ஆத்மனே பிரம்மம் என்று அறிய வேண்டும். ஆத்மனே அதிகப் பிரியமுள்ளவன். ஆத்மா என்றால் " தான் " என்று பொருள். " ஆப்ணோதி இதி ஆத்மா " இந்த ஆத்மனை அறிந்து கொண்டால் பிரம்மானந்தம் பரிச்சயமாகிறது. ஆத்மனே உண்மையாக அறியப்பட வேண்டியவன். இதற்குக் காரணம் புத்திரன், செல்வம், பத்தினி, பதி, வீடு, வாகனங்கள் முத்லானவை நமக்குப் பிரியமாய் இருப்பது உண்மைதானே ? ஏன் தெரியுமா ? இவை தன்னைச் ( நம்மை ) சார்ந்த்து. இவற்றையும் விட ஆத்மனே அதிக பிரியமாகி இருக்கிறான். ஆகவே அப்படிப்பட்ட இந்த ஆத்மாவை ஒருவன் தெரிந்துகொண்டால், புரிந்துகொண்டால் அவன் உலகத்தையே தெரிந்துகொண்டது போல் ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment