Friday, October 22, 2010

இந்த ஹிந்துக்களுக்கு எத்தனை கோடி சுவாமிகள் !

மேலே வரையப்பட்ட வாக்கியம் பொதுவான ஆனால் காலம் காலமாக கேட்கப்படும் ஒரு கேள்வி. உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட சுவாமிகள் இருப்பதாக எந்த ஹிந்துவும் எண்ணவில்லை. வைதிக சமயம் சுவாமி ஒருவரே என்று கண்டது மட்டுமல்ல, இந்த ஜீவனும்கூட அதே சுவாமிதான் என்பதையும் கண்டுபிடிக்கிறது. எனவே பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகா சக்தியாக ஒரு சுவாமிதான் இருக்கிறது என்பதில் எந்த ஹிந்துவுக்கும் ஐயமில்லை. ஆனால் அந்த ஒரு சுவாமி பல ரூபங்களில் வர முடியும் என இவன் நம்புகிறான்.

ஒரே சுவாமி நம் தேசத்தின் பல மகா புருஷர்களுக்குப் பல ரூபங்களில் தரிசனம் தந்திருக்கிறார். அந்தந்த ரூபங்களுக்குரிய உபாசன மார்க்கம் எல்லாவற்றையும் அந்த மகா புருஷர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள். எந்தத் தேவதையாக ( any form of God ) இருந்தாலும் சரி, அது முடிவில் பரமாத்மாவே ஆகையால், நாம் சந்தேகம் கொள்ளாமல் பூரண சிரத்தையோடு பக்தி வைத்தால் அது நமக்கு நிச்சயம் பரிவைத் தரும்.


அவரவர் மனதைப் பொறுத்து ஒன்றில் பிடிமானம் கொள்வதற்கு இத்தனை தேவதைகள் இருக்கின்றன. தாயாரிடம் குழந்தைபோல் பரமாத்மாவை அநுபவிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை உள்ளவனுக்கு அம்பாள் உபாசனை இருக்கிறது, ஒரே சாந்தத்தில் அழுந்திப் போக வேண்டுமென்ற மனோபாவம் உள்ளவனுக்கு தட்ஷிணாமூர்த்தி இருக்கின்றார். ஆனந்தமாக ஆடிப்பாடி பக்தி செலுத்த விரும்புகிறவனுக்கு கிருஷ்ண பரமாத்மா இருக்கின்றார். விருப்பம் இருந்தாலும் விருப்பம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகாசக்தியிடம் பக்தி செய்வது என்று இல்லாமல் நம் மனசுக்கு எப்படி விருப்பமோ அதற்கு அநுசரனையாகவே அந்த மகாசக்தியை மூர்த்தியில் பாவித்து பக்தி செய்வதற்கு " இஷ்ட தேவதை " வழிபாடு வழிவகுக்கிறது. அன்போடு உபாசிக்க வேண்டுமானால், உபாசனைக்கு உரிய மூர்த்தி நம் மனோபாவத்திற்கு பிடித்தமானதாக இருந்தால்தானே முடியும் ? இதனாலேயே இஷ்ட தேவதை என்று தனக்குப் பிடித்த மூர்த்தியை உபாசிக்க நமது மதம் சுதந்திரம் தருகிறது.

ஆனால் அவரவர் தமது இஷ்ட தேவதையை வணங்கும் போது மற்றவரதோ அல்லது மற்ற மதத்தினரதோ இஷ்ட தேவதைகளை தாழ்வாக எண்ணக் கூடாது. நமக்கு எப்படி இந்த ரூபத்தில் பரமாத்மா அநுக்கிரகம் செய்கிறாரோ அவ்வாறே அவர்களுக்கும் இன்னொரு ரூபத்தில் அநுக்கிரகம் செய்கிறார் என்ற தெளிவு வேண்டும். " அந்தந்தத் தேவதைக்குரிய புராணத்தைப் பார்த்தால் அது ஒன்றே சுவாமி, மற்ற தேவதைகள் எல்லாம் அதற்குக் கீழானவை, இதனிடம் அவை தோற்றுப் போயின என்றெல்லாம் இருகிறதே ! என்று கேட்கலாம். இதற்கு நஹிந்தா நியாயம் என்று பெயர். அதாவது இதர தேவதைகளை நிந்திப்பது நோக்கமல்ல மாறாக இந்த ஒரு தேவதை ஆராதிப்பவருக்கு மனம் சிதறாமல் இது ஒன்றிடமே தீவிரமாகப் பற்றுதல் ஏற்பட வேண்டும் என்பதே புராணத்தின் நோக்கம். அதனாலேயே இந்தத் தேவதைக்கு மட்டும் மற்றத் தேவதைக்கு இல்லாத உத்கர்ஷம் ( உயர்வு ) சொல்லப்படுகிறது.

மகாநுபாவர்களாக இருந்தவர்கள் எல்லாத் தேவதைகளையும் சமமாகவே பார்த்தார்கள். மகா கவிகளான காளிதாசர், பாணன் முதலியவர்களும் ஒரே வஸ்துதான் பல மூர்த்திகளாகவும் வருகிறது என்று ஐயமறக் கூறுகிறார்கள்.

பக்தர்களின் மனோபாவத்தைப் பொறுத்து பரமாத்மா பல ரூபம் கொள்வதைப் போலவே பிரபஞ்சத்தில் வெவ்வேறு காரியங்களைப் பொறுத்து வெவ்வேறு ரூபம் கொள்கிறது. ரஜோ குணத்தால் சிருஷ்டி செய்யும்போது அதற்கேற்ப பிரம்மாவாகிறது. ச(ஸ)த்வ குணத்தால் பரிபாலிக்கும் போது அதற்கேற்ப விஷ்ணுவாகிறது. தமோ குணத்தால் சம்ஹரிக்கும் போது அதற்கேற்ப ருத்ர ரூபம் கொள்கிறது. இந்த மூன்றையே பாணரும், காளிதாசரும் ஒரே சக்தியின் மூன்று வடிவங்களாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த மூன்றுக்கும் பொருந்துவது முப்பத்து முக்கோடி தேவதைகளுக்கும் பொருந்தும்.

நீ பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பாரத தேசத்தவன், பூலோக தேசத்தவன், மற்ற வேறு தேசத்தவன் என்று பாகுபாடு செய்யப்பட்டவன் அல்ல. ஹிந்து மதத்தைச் சேர்ந்தவன், மற்ற மதத்தைச் சேர்ந்தவன் என்றும் கூட உண்மையில் நீ உன்னை சொல்ல முடியாது. ஏனெனில் நீ உண்மையில் அந்த பரமாத்மாவின் ஒரு அம்சம் மட்டுமே. அந்த ஒரே பரம்பொருளின் அபின்னமான சொரூபமாய் இருக்கிறாய். எப்படி நீயோ அப்படியே இந்த சகல ஜீவராசிகளும்.

பகவான் எல்லாவிதமாகவும் இருக்கிறார், எல்லாவற்றையும் மீறியிருக்கிறார், சகல குணங்களும் நிறைந்தவராக இருக்கிறார், நிர்குணமாகவும் இருக்கிறார், சகலத்துக்கும் ஆதாரமாக இருக்கிறார், எல்லாவற்றையும் கடந்திருக்கிறார்.

தர்மங்களும் மதாசாரங்களும் நிலைப்பதும் சிதைவதும் நம்முடைய மனதைப் பொறுத்த அம்சங்கள்.எங்கெல்லாம், மனங்கள் மட்டுமே ஒன்றுபடுகிறதோ, அங்கெல்லாம் எல்லைக் கோடுகள் தகர்க்கப் படுகின்றன, சிறுமைத்தனங்கள் சிதறடிக்கப்படுகின்றன, செயற்கையாகத் தூண்டப்படும் பகையுணர்ச்சியும், இழி நோக்கங்களும் அங்கு குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது.

ஆகையால் எந்தவிதமான சந்தேகமும், மயக்கமும் இல்லாமல், என் தெய்வம் உயர்ந்தது, உன் தெய்வம் தாழ்ந்தது என சண்டையிடாமல், இங்கு உள்ள பேதங்கள் யாவும் உலக வியாபார சௌகர்யத்திற்காக ஏற்பட்டது என்ற உண்மையை சதா மனதில் நிலைத்து, தன் மனோபாவத்திற்கு அநுகூலமான முறையில் அந்த பரப்பிரம்மத்தை மனமுவந்து, உண்மையான பக்தியுடன் ஆராதித்துப் பயனடைய வேண்டும். வாத - விவாதங்களுக்கு உண்மை பக்தியில் இடம் கிடையாது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...