Thursday, November 18, 2010

மதுரை வீரன் கதை

கருப்பு, ஐயனார் போல மதுரைவீரனும் பரவலாக எல்லோரும் வணங்கும் கடவுளாக இருக்கிறார். மதுரை வீரன் கதைப்பாடலும், மதுரைவீரன் கூத்தும் இந்தக் கதையை காலங்காலமாக மக்களிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. சரித்திரங்களை படங்களாக கொண்டு செல்லும் முயற்சியில் எம்.ஜி.ஆர் எடுத்து நடித்த படம் “மதுரைவீரன்”.
எல்லா தெய்வங்களைப் போல சாதிபாராமல் வணங்கினாலும், மதுரைவீரன் சத்திரியன் அல்ல, சக்கிலியன் என்று சொல்வோரும் உண்டு. ஆனால் கதைப் பாடல்களில் அரசனின் மகனாகவே மதுரைவீரன் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். தாழ்த்தப்பட்ட ஒருவனை தலைவனாக ஏற்றுக் கொள்ளாத மக்கள் இருக்கிறார்கள். கதையில் திரிபு ஏற்படுத்தி தந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. உண்மை எதுவென மதுரைவீரனை குலதெய்வமாக வணங்கும் நண்பர்கள் தான் சொல்லவேண்டும்.

கதை -
வாரணவாசி பாளையம் அரச குடும்பம், ராணிக்குக் குழந்தை பிறக்கிறது. ஆண் குழந்தை. சந்தோஷத்துடன் தமுக்கடித்து அறிவிக்கிறார்கள். ஆனால் ‘கொடி சுற்றிப் பிறந்திருக்கிற குழந்தையால் அரசுக்கும், குடிமக்களுக்கும் ஆபத்துவரும். அதனால் குழந்தையைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடவேண்டும்’ என்று சொல்கிறார் அங்குள்ள ஜோதிடர். ராணிக்குப் பிரிய மனமில்லை. மன்றாடிக் கெஞ்சுகிறார். இருந்தும், கதற கதறக் குழந்தையைப் பிரிக்கிறார்கள். கொண்டு போய் ஊர் எல்லையிலுள்ள காட்டில் விடுகிறார்கள் காவலர்கள்.
காட்டிற்குள் வந்த தாழ்த்தப்பட்ட ஜோடி அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறது. வீரன் என்று பெயரிடுகிறார்கள். என்னதான் திறமையிருந்தாலும், தன்னைத் தாழ்ந்த சாதி என்று சொல்லி ஒதுக்கும்போது கோபப்பட்டு எதிர்க்கிறான் வீரன். ஆற்றில் விழுந்த ராஜகுமாரியான பொம்மியைக் காப்பாற்றுகிறான். பிறகு அரண்மனையை விட்டுத் தள்ளி பொம்மி விரதம் இருக்கும்போது காவலுக்குப் போகிறான். காதல் உருவாகிறது. அரண்மனையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. வீரனைப்பிடித்து யானை மிதித்து சாகவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்கள். அந்த நேரத்தில் யானையில் வந்து காப்பாற்றுகிறாள் பொம்மி.
திரும்பவும் வீரனைப் பிடிக்க திருச்சி மன்னரின் படை உதவியைக் கேட்கிறார்கள். வீரன், பொம்மி இருவரையும் பிடித்து திருச்சி மன்னர்முன் நிறுத்துகிறார்கள். சாதியை ஒரு பொருட்டாக நினைக்காமல் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் மன்னர். கூடவே, தனது தளபதியாக்கி திருமலைமன்னரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு அனுப்புகிறார்.
திருடர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது மதுரை. அழகர் மலைப்பகுதியில் சங்கிலிக் கருப்பன் தலைமையில் ஒரு கொள்ளைக்கூட்டம். அதைப் பிடிப்பதற்கு முன்பு அரண்மனை நாட்டியப் பெண்ணான வெள்ளையம்மாள் வீட்டில் கொள்ளை. போய்த் தடுக்கிறான் வீரன். அந்த வேகம் வெள்ளையம்மாளின் மனதைக் கவர்கிறது. திருமலை மன்னரும் அவள் மேல் காதலுடன் இருக்கிறார். இதில் வீரன் தலையிடுவதை அவர் விரும்பவில்லை.
பத்து நாட்களுக்குள் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்கக் கெடு விதிக்கிறார். மாறு வேடத்துடன் கொள்ளையர்கள் தங்கியிருக்கிற இடத்தைச் சுற்றி வளைக்கிறான் வீரன். பல பொருட்களை மீட்கிறான். கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் மட்டும் தப்பிவிடுகிறான்.
பத்து நாட்களுக்கான கெடு முடியாத நிலையில், மீட்ட பொருட்களை மொத்தமாக அரசனிடம் ஒப்படைப்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறான். பௌர்ணமி அன்று வெள்ளையம்மாள் வீட்டுக்குப் போகிறான். அரசனின் நெருக்கடி தாங்கமாட்டாமல் தன்னைச் சாகடித்துக் கொள்ள தயாராகிறாள் வெள்ளையம்மாள். வீரன் தடுத்து அவளையும் மனைவியாக்கிக் கொள்கிறான்.
திருமலை மன்னருக்குக் கோபம். வீரனைக் கைது செய்கிறார்கள். விசாரணை நடக்கிறது. திருடர்களுக்கு வீரன் உதவியாக இருந்ததாக பொய்க் குற்றம் சுமத்தப்படுகிறது. வாதாடுகிறான் வீரன். பலனில்லை. மாறு கை, மாறு கால் வாங்க உத்தரவிடுகிறார்கள்.
மாட்டு வண்டியில் கட்டிய நிலையில் வீரனைக் கொண்டு போகிறார்கள். அதற்குள் மன்னனிடம் போய்ச் சண்டையிடுகிறாள் வெள்ளையம்மாள். மன்றாடுகிறாள் பலனில்லை. கடைசியில் மனம் மாறி, கொலைக்களத்திற்குப் போகிறார் மன்னர்.
அதற்குள் கொலைக்களப் பீடத்தின் மீது நிறுத்தி மாறுகை மாறுகால் வாங்கி விடுகிறார்கள். துடிதுடித்து வீரன் உயிர் துறந்ததும், அவனது மனைவிகளான பொம்மியும், வெள்ளையம்மாளும் கூடவே விழுந்து உயிர்துறக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...