1)
சுடுகாட்டில் வாழும் தெய்வம் என்பதால் “சுடலை” என்றும் மாட்டை வாகனமாகக் கொண்டதால் “மாடன் என்றும் வழங்கி, அவ்விரண்டும் இணைந்து “சுடலைமாடன்” என்ற பெயர் உருவானது. சிவனை சுடலை எனவும், சுடலைமாடன் எனவும் குறிப்பிடுவதுண்டு. சுடலைமாடனை சிவ அம்சமாகவே சைவர்கள் பார்க்கின்றார்கள்.
பார்வதி சிவனிடம் “தனக்கு ஆண்பிள்ளை வரம் வேண்டும்” என்று கேட்கின்றாள். சிவன் கைலாயத்தில் உள்ள முப்பத்தி இரண்டாம் தூணில் எரிகின்ற மணிவிளக்குகளில் முந்தானையை ஏந்தி நிற்குமாறு கூறுகிறான். அவ்வாறே பார்வதியும் விளக்கின் கீழ் முந்தானை ஏந்தி நிற்க, பரம சிவன் அந்த விளக்கின் சுடரை தூண்டிவிட முந்தானையில் அந்தச் சுடர் தெறித்து விழுகிறது. அந்த சுடர் வெறும் முண்டமாக இருப்பதைக் கண்ட பார்வதி பயந்து தன் கணவனிடம் கூறுகிறாள். சிவன் அந்த முண்டத்தினைத் தலையுள்ள குழந்தையாக உருவாக்குகிறான்.
அந்தக் குழந்தையை அன்போடு வளர்த்து வருகின்றனர். ஆனால் அந்தக் குழந்தை இரவில் சுடலைக்கு சென்று பிணங்களைத் தின்கிறது. அதைக் கண்ட பார்வதியும் சிவனும், அந்தக் குழந்தையை பூமிக்கு அனுப்பி விடுகின்றனர். குழந்தை சுடலையிலேயே தங்கி பிணங்களை தின்று வளர்கிறது. வாலிபம் அடைந்ததும், சுடலைக்கு பெண் தேவைப்படுகிறாள். பூலோகத்தில் இருக்கும் பெண்கள் யாரும் வேண்டாமென சிவனிடம் சென்று தனக்கு ஒரு பெண்துணை வேண்டுமென கேட்கின்றான். சிவனும் இசைந்து சுடலைமாடத்தியை உருவாக்கி கொடுக்கிறான்.
சிவன், சுடலை மாடனின் வெறியைத் தணிக்க இருவருக்கும் கொடை கொடுக்கின்றனர். அந்த விழாவில் இந்திராணியின் நடனம் நடைபெறுகிறது. சுடலை மாடன் ரத்தபலியும், மகுடச் சத்தமும் கேட்கிறான். இந்திராணியின் காற்சிலம்பின் பரல் தெறித்து விழ கணியான் பிறக்கிறான்.
சுடலை மாடனுக்காக மகுடம் வாசித்து, ஆடி, நரபலிக்கு பதிலாக நாக்கை வெட்டி ரத்தம் கொடுக்கிறான். பின்னர் சுடலைமாடன் , சுடலைமாடத்தியோடு பல வழிகளைக் கடந்து கன்னியாகுமரி வந்தடைகிறான்.
அங்கு இருக்கும் பகவதியிடம் தன் நிலையை விளக்கத் தனது காவலுக்கு அவனை வைத்துக் கொள்கிறாள் பகவதி. சில நாள்கள் கழித்து மலையாள தேசம் செல்ல விருப்பம் தெரிவிக்கிறான் சுடலை. மலையாளத்தில் உள்ள மாந்திரீகத் தன்மைகளை விளக்கி, ”அங்கு செல்வது ஆபத்து. எனவே நீ போகக் கூடாது” என்று தடுக்கிறாள் பகவதி. அதை மறுத்த சுடலை, ஆண்டிக்கோலத்தில் காளிப்புலையன், அவன் மகள் மாஇசக்கி வருகிற ஊருக்குச் செல்கிறான். அந்த ஊருக்கு வந்து சுடலைப் பாம்புகளை ஆட்டி வைத்து வேடிக்கை காட்டுகிறான். மாஇசக்கி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எனவே, பிச்சைக்காரனாக வேடம் ஏற்று வீடுவீடாகச் சென்று பிச்சை கேட்கிறான். மாஇசக்கி வீட்டிற்குச் சென்று, தான் அவளைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்கிறான்.
மாஇசக்கியைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்ற சுடலைமாடன் அன்றிரவு பல்லியின் வடிவில் அவளைக் கற்பழிக்கிறான். அதைத் தன் தந்தையிடம் முறையிடுகிறாள் மாஇசக்கி. அவள் தந்தை காளிப்புலையன் மை போட்டுப் பார்க்கிறான். ஆனால், அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுடலை இதை பகவதியிடம் கூறுகிறான். பின்னர் பகவதி அவனை மன்னித்துக் காவலைத் தொடரும்படி சொல்கிறாள்.
காக்காச்சி மலையில் நான்கு பளியர்கள் பயிரிட்டு வருகின்றனர். புழுவாக வடிவம் கொண்டு சுடலை, அப் பயிர்களை அழிக்கிறான். காளிப்புலையன் மீண்டும் மை போட்டுப் பார்க்கிறான். இதற்கெல்லாம் காரணம் சுடலைமாடன்தான் என்பதை அறிகிறான். மாடன் கோபம் கொண்டதாலேயே இப்படியான அழிவுச் செயல்களைச் செய்கிறான் என்று உணர்ந்து மாடனுக்குக் கொடைவிழா எடுக்க முன் வருகின்றனர்.மாடன் காளிப்புலையனின் மகள் சூலியை பலி கேட்கிறான். காளிப்புலையன் முதலில் மறுத்தாலும் பின்னர் அவளை சுடலைமாடனுக்குப் பலி கொடுக்கிறான். பின்னர் ஒரு யானையைப் பலியாகக் கேட்கிறான் சுடலை. பட்டத்து யானையைத் திருடிக் கொண்டு வந்து புலையன் பலியிடுகிறான்.
பட்டத்து யானை காணாமல் போகவே அதைக் கொண்டு சென்றவன் காளிப்புலையன் என்பதை அறிந்த மன்னன் அவனைப் பலியிடுகிறான். அந்த பலியையும் சுடலைமாடன் ஏற்றுக் கொள்கிறான். அங்கிருந்து சொரிமுத்தையன் கோயிலுக்கு வந்து ஐயனோடு சம்போடைக்குப் போகிறான். அங்கு ஆரிய சாம்பன் மகள் ஓடைக்குக் குளிக்கப் போகிறாள். இதைக் கண்ட மாடன் மீன் வடிவில் ஓடையில் சென்று அந்தப் பெண்ணோடு கூடுகிறான். அவள் உடல் நலம் குன்றவே மாடனுக்குப் பூசை செய்கின்றனர். அந்தப் பூசையையும் பெற்றுக் கொள்கிறான்.
அங்கிருந்து கல்லிடைக்குறிச்சிக்குச் செல்கிறான் மாடன். அவ்வூர் அருகில் உள்ள பொன்னிட்டாங்கயத்தில் மீனாகத் துள்ளினான் மாடன். நாடார்கள் மரம் வெட்ட வருகின்றனர். அங்கு மீன் துள்ளிக் கொண்டிருப்பதைக் கண்ட மரம் வெட்டிகள் அந்த மீனைப் பிடித்து வெட்டி பங்கு வைக்கிறார்கள். அவர்கள் வைக்கும் பங்கு குறைந்து கொண்டே இருப்பதைக் கண்ட நாடார்கள், ‘இது மாடனுடைய வேலையே’ என்று அஞ்சி ஓடுகின்றனர். அவர்களுள் பலரை பலி எடுத்துக் கொள்கிறான் மாடன். மிஞ்சியவர்கள் பயந்துபோய்ச் சுடலை மாடனுக்குக் கோயில் எழுப்புகின்றனர். அங்கிருந்து சொரிமுத்தையன் கோயில் வன்னிமரத்தில் குடியேறுகிறான் சுடலைமாடன்.
திருச்செந்தூர் கோயிலுக்குக் கொடிமரம் செய்வதற்கு ஆசாரிகள் காட்டுக்குப் போகிறார்கள். அப்போது சகுனத் தடைகள் பல ஏற்படுகின்றன. இருப்பினும் மாடன் குடியிருக்கும் வன்னிமரத்தைச் சிலர் வெட்டுகின்றனர். அவர்களைப் பலி கொள்கிறான் மாடன். சிலரை சொரிமுத்தையன் காப்பாற்றுகிறான். பயந்து போன மக்கள் மாடனுக்குத் திருச்செந்தூரில் பூசை செய்கின்றனர். அந்தப் பூசையை ஏற்றுக் கொண்ட மாடன் அவர்களுக்குப் பயனளித்து வருகிறான்.
2)
சுடலை ஆண்டவர் கதை – அன்று ஒருநாளில் புனிதமான கைலாச பார்வதத்தில், உலகையே கட்டி காக்கின்ற சிவனும் பார்வதியும் இடவலமாக வீற்றிருந்தார்கள். அங்கு மேலும் தேவர்கள், ரிஷிமார்கள், கம்போவர்கள், கணநாதர்கள், சாரணர்கள், சித்தர்கள் என கைலாசதிற்கானவர்களும் அங்கு இருந்தனர்.
உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும், எந்த உயிருக்கு எவ்வளவு என தெரிந்து, அறிந்து உணவளிப்பதும், ஈசனகிய சிவனின் பணிகளில் ஓன்று. அவ்வாறே அன்றும் பார்வதி தேவியிடம் ஈசன், நான் பூலோகம் சென்று அனைத்து உயிர்களுக்கும் அவைகளின் பிரவிப்பயனின் படியான கணக்குப்படி உணவளித்து வருகிறேன் என கூறி பூலோகம் சென்றார்.
பூலோகத்தில் ஈசன், எறும்பு முதல் யானைவரையிலும், உருவாகுகிற திசு முதல் வயிற்றிலிருக்கும் சிசு வரையிலும் எவற்றிற்கும் குறைவில்லாது படியளக்கும்போது, அங்கே கைலாசத்தில் இருக்கும் அம்மை பார்வதியாளுக்கு ஒரு சந்தேகம் சிவனின் மீது வந்தது. தினமும் ஈசன் படியளக்க போகிறேன் என்று செல்கிராரே அது எவ்வாறு, எவருக்கும் தவறாது எப்படி படியளக்க முடியும் என்று, ஈசனின் பணிமீது, தேவியின் மனதில் ஒரு சந்தேகம் வந்தது. எனவே இதை சோதித்து அறிய நினைத்தாள் அம்மை உமையவள்.
உடனே தேவலோக தேவ கட்சரிகளை அழைத்த தேவி, நீங்கள் சென்று ஒரு காஞ்சுராம் கம்பில் கடையப்பட்ட சிறு குமிழ் ஒன்றை செய்து வாருங்கள் என்றார். அவர்களும், மூடினால் காற்றுகூட புக முடியாத அளவில் துல்லியமான ஒரு காஞ்சிரங்குமிழை உருவாக்கி அம்மையிடம் அளித்தனர். உடனே தேவி பூலோகத்தில் இருந்து ஒரு சித்தெரும்பு ஒன்றை பிடித்து சிமிழுக்குள் அடைத்து, அதை தனது சேலை முடிப்பில் முடிந்து வைத்தாள்.
சிறிது நேரம் சென்றதும் ஈசன் அனைத்து உயிர்களுக்கும் படியளந்து மீண்டும் கைலாசம் வந்தார். இறைவனுக்கு அவர் வந்ததும் செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்த தேவி, இறைவனிடம் நீங்கள் எவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் படியளந்தீர்கள், ஒரு உயிர் கூட விடுபட்டிருக்காதா என்று ஈசனிடம் வினவ, அதற்கு ஈசன், ஒவ்வொரு உயிருக்கும், அந்த உயிர் அதன் முற்பிறவியில் செய்த நல்ல, கெட்ட காரியங்களின் கணக்குப்படி இந்த பிறவி வழங்கப்பட்டிருக்கும், அந்த பிறவிப்பலன் படி ஒவ்வொரு உயிருக்கும், ஒவ்வொரு நாளும் எவைஎவை வழங்கப்பட வேண்டும் என கணிக்கப்பட்டு வழங்கப்படும். இந்த கணக்கீட்டில் உணவும் அடங்குவதால், அதில் தவறு நேரக்கூடாது என்று நானே நேரில் சென்று என் கவனத்தில் வைத்து அளித்து வருகிறேன். எனவே தவறவே தவறாது என்றார்.
உடனே தேவி உமையாள் ஈசனிடம், ஈசனே நீங்கள் பூலோகம் சென்ற பிறகு என்னிடம் ஒரு உயிர் அகப்பட்டுக் கொண்டது. அது ஒரு வேளை உணவின்றி, உங்களை நம்பி உயிரை கூட விட்டிருக்கலாம் என்று கூறிக்கொண்டே முடிப்பை பிரித்து சிமிழை திறந்து பார்க்க, அதிர்ந்து போனாள். அங்கே அந்த சித்தெரும்பு வாயில் ஒரு திணை அரிசியை கவ்விக்கொண்டு குமிளுக்குள் சுற்றி சுற்றி வந்தது, அதனோடு இன்னொரு சித்தெரும்பும் துணைக்கு இருந்தது. உடனே தேவி இறைவனின் காலில் விழுந்து, ஈசனே தங்களின் பெருமையை நானே மறந்து, அறியாது தெரியாது மாபெரும் தவறை செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று நடுநடுங்கி அம்மை ஈசனிடம் மாப்பு கேட்க, ஈசனோ கண்கள் சிவந்து கடும் கோபம் கொண்டு அம்மை உமையவளுக்கு ஒரு சாபத்தை உதிர்த்தார்.
அந்த சாபம் என்னவெனில், கணவனை சொதித்ததால் காட்டு பேச்சியாக போகக்கடவது, மன்னனை சோதித்ததனால் மயான பேச்சியாக போகக்கடவது. பேயாக பிறந்தாலும் போதாது, நீ சுடுகாட்டு பேயாக போகவேண்டும், (பேச்சி என்று சொன்னால் தமிழில் பேய் என்று அர்த்தம). இப்படியாக பலவித சாபங்களை கொடுத்த சுவாமிகளிடம், அம்மை அழுது புலம்பியவாறே, ஈசனே இந்த அகோரமான சாபம் எனக்கு எப்போது தீரும் என்று கேட்க, அதற்க்கு ஈசன், நீ பேச்சியாக மயானத்தில் நின்று என்னை நினைத்து மாபெரும் தவம ஒன்று செய்தால், நான் அங்கு ஒரு ஆண் குழந்தையாக நான் அவதாரம் செய்வேன். நீ அந்த குழந்தையை கையால் தொட்டதும் உன் சாபம் தீரும் என்றார்.
ஈசனின் கோபத்தினால் சாபம்பெற்று பூலோகம் வந்த அம்மை உமையவள், பூலோகத்தில் தில்லைவன காடாகிய மயானபூமியில் ஐம்புலன்களையும் அடக்கி, ஈசனை நினைத்து, அம்மாள் பேச்சியாக ஒரு மபெரும் தவத்தை செய்யதார், அப்படியே அம்மையின் தவத்திற்கு இரங்கிய ஈசன் அங்கு பேச்சியான தேவிக்கு காட்சி கொடுத்தார். அப்படியே அம்மையிடம், உனக்கு என்ன வரம் வேண்டும் என்றார். அதற்க்கு அம்மை, ஈசனே நான் கணவன் உடன் சேராது ஒரு கைக்குழந்தை வேண்டும் என்றாள். உடனே ஈசன், பெண்ணே இந்த தில்லைவன காடாகிய மயானபூமியில், சிதையில் பிணம் கொடுஞ்சுடராக எரிந்துகொண்டு இருக்கும்போது, அந்த சுடரின் அருகாமையில் வந்து கண்களை மூடி முந்தாணி சேலையேந்தி என்னை நினைத்து நின்றால், ஒரு ஆண் குழந்தை அவதாரமாகும் என்றார். அப்படியே பேச்சி யாக அம்மை தவமிருக்க, மயானத்தில் பிணங்கள் எரிந்து வரும் சுடரிலிருந்து, சிவனின் திருவருளால் அம்மாவின் முந்தாணியில் சுடலை முத்துக்கள் வந்து விழுந்தன. அம்மா அவற்றை கூட்டி அள்ள அது ஒரு சதை பிண்டமாக உருவெடுத்தது. அந்த பிண்டதிற்கு உயிர் உள்ளது, ஆனால் அதற்கு எந்த உறுப்புகளும் இல்லை. உடனே அம்மை இறைவனை நினைத்து அழுது புலம்பி, ஈசனே பிள்ளைவரம் கேட்ட எனக்கு, ஒரு முண்டத்தை தந்து விட்டீரே, நான் என்னசெய்வேன் என்று முறையிட, ஈசனின் திருவருளினால் அந்த பிண்டம் அழகான ஒரு ஆண் குழந்தை வடிவம் பெற அம்மை மகிழ்ந்தாள். சுடரில் இருந்து உருவானதால் அந்தகுழந்தைக்கு சுடலை என்று பெயரிட்டாள்.
சுடலை குழந்தையாக இருக்க, அந்த குழந்தையின் அழகானது, ஏறு நெற்றி கூர்புருவத்துடனும், இருண்ட கண்கள், சிவந்த முகம், பவளம் போன்ற நிறத்துடனும் மாபெரும் அழகுடன் இருந்தது, உடனே அம்மை குழந்தைக்கு முத்தமிட்டு, நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, மயான பூமியில் வைத்தே சுடலைக்கு அமுதம் ஊட்டி, குழந்தையுடன் கைலாசம் வந்தாள் அம்மை உமையவள்.
கைலாசம் வந்த மாயக்குளந்தை சுடலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வேகமாக வளர்ந்து வருகிறது, நாட்கள் செல்கிறது, அப்படியே ஒருநாள் குழந்தைக்கு அமுதுஊட்டி தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு பார்வதி அரனுடைய பதிக்கு சென்றுவிட்டாள். அப்போது நாடு ஜாமம் 12 மணி, அந்த நேரதிலே தொட்டிலில் இருந்த திரு குழந்தைக்கு ஒரு விதமான வாசம் தென்பட்டது, அது பிணம எறியும் வாடை, உடனே சுடலை நினைக்கிறார், அந்த அம்மா நமக்கு அமுது ஊட்டி நேரமாகிவிட்டது, நமக்கு பசிக்கிறது, இனிமேல் இந்த அம்மா ஊட்டும் அமுதம் நமக்கு போதாது, தனது வயிறு இந்த வாடை வரும் பிணங்களை தின்றால்தான் நிறையும் என்று எண்ணி, எவருக்கும் தெரியாது, வடக்குவாசல் வழியாக, தில்லைவன காடகிய மயான பூமிக்கு சென்றார். அங்கோ ஏகப்பட்ட பிணங்கள் எரு அடுக்கி எரிந்துகொண்டிருக்க, அவற்றை பார்த்த சுடலை, வெந்து கொண்டிருந்த பிணங்களின் வலது சுற்றி இடமாக வந்து, எவளவு வேண்டுமோ அவ்வளவு பிணங்களை தின்று, அத்துடன் அங்கிருந்த பேய்களுக்கும் விருந்தளித்து, பேயோடு பேயாக பேச்சி மகன் சுடலை நடனமாடினார். நேரமானது, அப்படியே கைலாசம் வந்து தொட்டிலில் குழந்தையாக படுத்துக்கொண்டார் சுடலை. அத்துடன் நில்லாது வயிறு பசிப்பது போல குவா குவா என்று அழுதார் சுடலை, குழந்தை அழுவது கேட்டு ஓடிவந்த பார்வதி அம்மாள் அப்படியே குழந்தையை அள்ளி அணைக்க, குழந்தையின் வாயில் ரத்தம் வடிய, பிணவாடையும் வீச, பார்த்தாள் பார்வதி, ஐயோ என்று அலறி குழந்தையை வீசி எறிந்து, ஈசனே, இது என்ன சோதனை, குழந்தை வரம் கேட்ட எனக்கு பிணம் தின்னும் பேயை குழந்தையாக தந்து விட்டீரே என்று அழுதாள். உடனே வந்தார் பரமசிவன், உட்காரணம் இல்லாது எவையும் நடத்த மாட்டார் ஈசன். எனினும் காரணத்தை வெளிக்காட்டாது, அம்மையை பார்த்த சிவன், ஆம் தேவி இவன் பிணம் தின்றதால், சைவமான என்னுடைய கைலயதிற்கு ஆகமாட்டான் இவனை பூலோகத்திற்கு அனுப்பிவிடுகிறேன் என்று கூறி சுடலையை அழைத்தார்.
சிவன் அழைத்ததும் வந்தார் சுடலை. மகனே சுடலை, உடல் எரியும் மயான சுடரிலிருந்து அவதாரமானதால், அந்த சுடலையாண்டியும் நீதானப்பா, மயானத்தில் மாய உருவெடுத்ததால் மாயாண்டி சுடலையும் நீயே, பேய்களுக்கு அதிகாரி நீ, பேறுபெற்ற மாசுடலையும் நீயே என்று கூறி, மகனே நீ பூலோகம் செல் அங்கு உனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது என்றார், அதற்கு சுடலை, பகவானே, என்னை அவதரித்த நீங்களே என்னை பூலோகம் செல்ல பணிக்கும்போது, நான் என்ன செய்ய முடியும். உங்களின் மனம் படியே நான் செல்கிறேன். ஆனால், அப்பனே அங்கு நான் என்ன செய்ய வேண்டும், அங்கு உணவுக்கு என்ன செய்வேன், இப்படியே போனால் என்னை யார் மதிப்பார்கள், பூலோகத்தில் எங்கு இருப்பது என ஈசனிடம் கேட்க, அதற்கு ஈசன், மகனே, என் ஒரு கணி அசைவிற்க்கும் காரணம் உண்டு, நீ அங்கு சென்றதுமே நான் உன்னை நடத்துவேன். பூலோக இடுகாட்டு சிதைகளில் உனக்கு உணவு கிடைக்கும், அது போக மனிதர்கள் உனக்கு வில்லோடு முரசோடு வீரகண்டன் கொட்டோடு ஊட்டு போட்டு கோடை கொடுப்பார்கள் நீ போகலாம் என்று சொல்ல, சுடலையோ ஈசனை பார்த்து, பகவானே அதே ஊட்டு பூசையை இந்த கைலாசதிலேயே எனக்கு போட்டு தாருங்கள், அப்போதுதான் நான் பூலோகத்திலும் சென்று இதுபோல கேட்க முடியும் என்ன்று சொல்ல, படைப்பின் குணமறிந்து, கொடுப்பதை கொடுத்து இடத்தை மாற்ற நினைத்தார் சிவம்.
நித்ய சைவமான ஸ்ரீ கைலயதில், அனைத்து தேவதைகளும் அதிர்ச்சியில் நிற்க, சுடலைக்காக ஈசனே நின்று, கைலாச வாசலிலேயே பலவிதமான இரத்த பலிகளை கொடுத்தார். அந்த பலிகளானது, பரண் பரணாக ஆடு, எருமை, பன்றி, என பலவிதமான உயிர்வகைகளுடன் நிறைந்திருந்தது. அவற்றை உண்ட சுடலையோ, மீண்டும் ஈசனை பார்த்து, அப்பனே எனக்கு தகுந்த வரங்களை கொடு நான் செல்கிறேன் என்று சொல்ல, உடனே ஈசன் சில வரங்களை கொடுத்தார். அவைகளாவன, மகனே உனக்கு ஓங்கார பேய்களை எல்லாம் உருட்டி அடக்க வரம், தர்க்கமிடும் பேய்களை எல்லாம் தடி கொண்டு விரட்ட வரம், நீ மயான சாம்பலை கையிலெடுத்தால் தீராத வினைகளும், நோய் நொடிகளும் தீர்ந்தொளியும் என்றார். அதற்கு சுடலையோ, நல்லவை மட்டுமே செய்தால் போதாது அப்பனே, கேட்டவர்களுக்கு கேடும் செய்ய வேண்டும். நல்லவர்கள் என்னை அறியாவிட்டாலும், எனக்கு பணிவிடை செய்யாவிட்டாலும் நான் நல்லது செய்வேன், ஆனால் கெட்டவர்கள் மற்றும் துஷ்ட தனமானவர்கள், என் காலடி பணிந்தாலும் நான் கருவருப்பேன், அதற்கு வரம் தாருங்கள் என்று கேட்க, ஈசனோ கேள் தருகிறேன் என்றார்.
உடனே சுடலை அப்பனே, நான் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு இருப்பேன், நேரம் தப்பிய வேளையிலே, என் சட்டத்திற்கு விரோதமானவர்களோ, என்னை நம்பும் நல்ல குணவானுக்கு தீங்கு செய்பவனோ, மற்றும் துரோகிகளோ என் எல்லைக்குள் நுழைந்தார்களானால், அப்படியே, நேரம் தப்பி வருவோரை நெஞ்சடியாய் அடிக்கவரம், துரோகித்த, வாலிகளையும் சூலிகளையும் வஞ்சி கொண்டு குத்த வரம், மூன்று மாத சூலிகளை முட்டை போல நேரிக்கவரம், நிறை வயிராய் வருபவரை குறை வயிராய் ஆனுப்பவரம், என பலவகையான துஷ்டதனமான வரங்களை கேட்க, ஈசன் அனைத்தயும் கொடுத்தார்.
கயிலை நாதனாம் ஈசனிடமிருந்து, அனைத்து வரங்களையும் பெற்ற சுவாமி, வீர வேசம், விகாரமான சொருபத்தோடு, கைலாசத்தின் தெற்கு கோட்டை வாசல் வளியாக, பூலோகத்தில் இறங்க, தெற்கு நோக்கி அங்கே முதல் ஸ்தலம் திருக்கேதாரம், அடுத்து வரிசையாக, புத்த காசி, கெளரிகுண்டலம், உத்திரபிரயாதை, தேவபிரயாதை, ஹரித்துவாரம் என பலபல புனித ஸ்தலங்களை கண்டு வணங்கி, வடகாசியில் 64 தீர்த்தங்களில் நீராடி, அடுத்து இறக்க முக்தியாம் காசியிலும் மற்றும் பல தீர்த்தங்களிலும் நீராடி நமது தென்னாடு வந்தார். தென்னாட்டில் திருவேங்கடமலையில் திருவேங்கட நாதரையும், அடுத்து திருக்காளாத்தி ஈசனையும் வணங்கி, அடுத்ததாக பல்லவர்கள் ஆண்டு வரும் தொண்டை நாட்டிலே, பஞ்சபூத மண்டல ஸ்தலமாகிய காஞ்சியை கண்டார். அங்கு காஞ்சி அம்மாளையும், ஏகாம்பரநாதனயும் வணங்கி, அடுத்து திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் முக்திபெற்ற அண்ணாமலையாரையும், உண்ணாமுறைஅம்மாளையும் வணங்கி, மேலும் சிதம்பரம், சீர்காழி, திருவணைக்காவல் என பலபல ஸ்தலங்களை கண்டு வணங்கிய சுவாமி மாயாண்டி சுடலை, பாண்டியநாட்டு எல்லைக்கு வந்தார். அங்கு மதுரையில் வைகையில் தீர்த்தமாடி மதுரை மீனாட்சி அம்மாளையும், சோமசுந்தர பெருமாளையும் வணங்கினார். இப்படியே 1008 சிவ ஸ்தலங்கள், 108 திருப்பதிகளையும் மாயாண்டி சுடலை வணங்கிவந்தார். கடைசியாக மலையாள நாடு காணவிரும்பிய சுடலை, மலையாள மேற்ற்கு கடலோரம் கோகுர்ணம் என்று ஒரு புண்ணிய ஸ்தலம் அங்கு சென்று சிவத்தை வணங்கி, அடுத்ததாக வைக்கியம், குருவாயூர், திருவனந்தபுரம் என பல இடங்களை தரிசித்து கொட்டாரக்கரை என்ற ஊருக்கு வந்தார். அந்த ஊரின் அருகில் பேச்சி பாறை மலை. அங்கே சென்ற சுவாமி அங்கிருந்து கீழ்த்திசையில் பார்க்க, அங்கே பகவதி என்ற பெண் தேவதை இருப்பதை கண்ண்டார்.
கொட்டார கரையிலிருந்து அந்த பகவதி அம்மன் என்ற தேவதை மலையாளத்தை ஆண்டு வருகிறது. பகவதி அம்மனுக்கு மாதம் இரண்டு திருவிழா, வருடம் இரண்டு தேரோட்டம் நடக்கிறது. அப்படியே பகவதி அம்மன் தேர் திருவிழாவுக்கு அன்றும் கொடியேறி ஒன்பதாவது நாள் ஆகையால் தேரோட்டம் நடந்தது. தேரிலே அமர்ந்து பகவதி அம்மன் தெருவழியே ஊர்வலம் வந்து கொண்டு இருந்தார். அங்கோ வேதர்கள் எல்லாம் வேதங்களை சொல்லிவர, தேவதாசிகள் தேருக்கு முன்னால் ஆடிவர, நட்டுவன் கொட்டிவர, ஆடலுடன் பாடலுமாக அந்த அம்மன் பகவதி தேர் பவனி வருகிறாள். பார்த்தார் மாயாண்டி சுடலை. எந்த தெய்வத்திற்கு தேர் பவனி நடக்கிறதோ அந்த தெய்வத்தின் கொடி அந்த ரதத்தில் பறக்கும். திருமாலுக்கு கருட கொடி, சிவனுக்கு காளை கொடி, பிரம்மாவுக்கு அன்ன கொடி, முருகனுக்கு சேவல் கொடி, விநாயகருக்கு எலி கொடி. ஆனால் இங்கு ரதத்தில் பறக்கும் கொடியோ சிங்க கொடி. பார்த்தார் செஞ்சுடலை மாயாண்டி. சிங்க கொடி பறப்பதால் அதுவும் நமது தாய்தான் என புரிந்து கொண்ட மாயாண்டி சுடலை, அங்கே பேச்சி பாறை மலையிலிருந்து ஒரே பாச்சலாக தேர் மீது பாய்ந்தார். தேரில் சுடலை விழவும் தேரின் அச்சாணி இரண்டாக முறிந்தது. அங்கே சிலர் தேரோட்டம் பார்க்காது பக்தி மார்கமின்றி, ஆடிவரும் தாசிகளை பார்த்து கொண்டு இருந்தார்கள், அதில் ஒருவன் தலையை பிடுங்கி அவன் ரசித்த தாசியின் முகத்தில் வீசினார். அலறி விழுந்து இருவரும் மாண்டனர். அங்கிருந்து ஒரே பாச்ச்சலாக பகவதி அம்மனின் கோட்டைக்கு வந்தார். கோட்டைக்குள் வந்து கதவை சாத்திக்கொண்டு, உள்ளே கடுமையான அட்டகாசங்களை செய்தார் மாயாண்டி சுடலை. கோட்டையை இடிக்கின்றார், கொடிமரத்தை அசைகின்றார், கொடிமரத்தில் ஒருகாலும் கோபுரத்தில் ஒருகாலும் வைத்து ஆதாழி செய்தார்.
அம்மை பகவதி பார்த்தாள், எவனோ ஒருவன், நம் ரதத்தை ஓடித்துவிட்டு கோட்டையிலும் சென்று ஆதாழி செய்கிறானே, இது என்ன விவகாரம் என்று மந்திரவாளோடு கடும் கோபத்தோடு கோட்டைக்கு வந்தாள். வாயில் கதவை தட்டி, யாரடா நீ, பகவதி கோட்டையில் வந்து ஆதாழி செய்ய உனக்கு என்ன தைரியம் என்று சத்ப்தமிட்டு, கதவை திறக்கிறாயா, அல்லது எனது மந்திர வாளுக்கு பலியாகிறாயா என்று கேட்க்க, பார்த்தார் மாயாண்டி சுடலை, அம்மை மிகவும் கோபமாக இருக்கிறார். இந்த ரூபத்துடன் அம்மை நம்மை கண்டால் அம்மையின் கோபம தீராது என்று எண்ணி, ஒரு ஏழு வயது சிறுவனின் உருவம் பூண்டு அம்மையின் முன்னே பாலகனாக நின்றார் மாயாண்டி சுடலை. அம்மை நேருக்கு நேராக பார்த்தாள் சுடலையை. இந்த பாலகனா இவளவு சேட்டை செய்தது, வேறு யாராவது கோட்டையில் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு சுடலையிடம் வந்து, யாரப்பா நீ, உன் குலம் கோத்திரம் என்ன, ஏன் அனாதையாக வந்து நிற்கிறாய் என்று, குழந்தையை கண்டவுடன் சோகம் உட்புகுந்து, இறக்க குணத்துடன் அம்மை சுடலையிடம் கேட்டார்.
சுடலை சொன்னார், அம்மையே என்னுடைய வரலாறே மிகவும் விசித்திரமானது, எல்லாரு இறந்த பிறகுதான் சுடுகாடு போவார்கள், ஆனால் நான் படைக்கப்பட்டதே மயான சுடலையில், சுடலையில் உருவானதால் எனக்கு சுடலை என்று பெயரிட்டார்கள். நான் பார்வதியாள் பிள்ளை, பரமனுடைய அமுஷம், பிறந்த இடம் உயர்ந்த இடம், நல்ல பிள்ளையாக இருந்திருக்கலாம், வீட்டுக்கு அடங்காமல் மாயானத்திலே போய் பிணத்தை தின்றுவிட்டு வந்துவிடவே அவர்கள், என்னை, நீ மாமிசத்தை தின்றதால் மாணிக்க கைலாயத்திற்கு ஆகாது எனவே, பூலோகத்திற்கு செல் என்று புறக்கணித்து அனுப்பிவிட்டார்கள். ஆகையால் தாயே இங்கு நான் தலை கீழாக வந்து விழுந்து விட்டேன்.
இந்த மண்ணுலகில் தாயே எனக்கு, அக்கமில்லை பக்கமில்லை ஆதரிப்பார் யாருமில்லை, திக்கு அற்ற பாவி போல இந்த தெருவில் நின்று தவிக்கின்றேன், நான் பார்வதிக்கு பிள்ளை என்றால் இந்த பகவதிக்கும் குழந்தைதானே, இப்போது வளப்பார் கை பிள்ளையாக வந்தேனம்மா உன்னிடத்தில், இருக்க ஒரு இடம் கொடு, நான் இருக்கின்றேன் உன்னுடனேயே என்றார் மாய சுடலை. பகவதி அம்மனுக்கு இரக்கமாகவும் இருந்தது, பார்த்தாள் பகவதி, இப்படி ஒருவன் நமக்கும் தேவைதான் என்று எண்ணி, மகனே நீ பார்வதிக்கு பிள்ளை எனில், நீ எனக்கும் பிள்ளைதான், அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நீ வரவேண்டிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய். தாயிடத்தில் வந்தபிள்ளை இனி கவலை படவேண்டாம், சுடலையில் பிறந்தால் உனக்கு சுடலை என்று பெயரிட்டதாக சொன்னாய், நானும் உனக்கு பெயரிடுகிறேன், தேரின் அச்சை உடைத்ததால் உனக்கு தேரடிமாடன் என்று பெயரிடுகிறேன், உனக்கு தேரடியிலே ஒரு நிலையம், தெப்பக்குளத்தில் ஒரு நிலையம் , கொபுரத்திலே ஒரு நிலையம் , கொடிமரதிலே ஒரு நிலையம் போட்டு தருகிறேன், அது மட்டுமல்ல, எனக்கு இடது பக்கம் ஈசான மூலையில் தெற்குமேட்டுகலுங்கு திருவாத்தி மூட்டுக்குள்ளே ஏழு அண்டா திரவியம் தண்டயத்தில் அசையாது இருக்கிறது. அதை கள்வர்கள் கொண்டு செல்லாது மெய்க்காவல் காத்துவந்தால் உனக்கு வயிறார உணவு தருகிறேன் என்றார்.
அம்மை பகவதியின் மொழி கேட்ட சுடலையோ, அம்மா உன்னுடைய உணவு வேறு, என்னுடைய உணவு வேறு. உனக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார் உனக்கு பூஜை செய்வதை இரு தினமாக நான் பார்க்கிறேன். உனக்கு ஒரு பித்தளை தாம்பாளத்தில் உப்பில்லாத பச்சரிசி சாதம் ஒரு கரண்டி வைத்து, ஒரு துணியை போட்டு மூடி, அதை, கணபதிகோயில் முதல் பைரவர் வரை அதையே படைக்கிறார். எனக்கு இந்த பூஜை போதாது, எனவே எனக்கு தனியாக ஒரு படப்பு போட்டு கொடு என்றார். அத்துடன், அந்த படப்பில் ஒரு நாளைக்கு ஒரு கோட்டை அரிசியை பொங்கி மூன்று உருண்டையாய் உருட்டி தரவேண்டும் என்றார். பகவதி அம்மையும் சரி என்று சம்மதிக்கவே, சுடலை ஆண்டவர் தன்னுடைய பூஜையை வாங்கிக்கொண்டு திரவியத்தை காத்து வருகிறார்.
அப்படியாக, கொஞ்ச நாளாக திரவியத்தை காத்து வருகிறார். ஆனால் சுடலையால் இருந்த இடத்தில அப்படியே இருக்க முடியவில்லை. அம்மை பகவதியை தரிசிக்க கோவிலுக்கு வருபவர்களில் யாரவது கெட்டவர்கள் மற்றும் துஷ்ட தனமானவர்கள் சுடலையின் பார்வையில் பட்டால், உடனே அவர்களை கொன்று தின்ன ஆரம்பித்தார். இதை தெரிந்துகொண்ட அம்மை வந்து தடுத்தாள், மகனே, கெட்டவர்கள் ஆனாலும் திருந்த வாய்ப்பு அளிக்கவேண்டும், அதற்காக இவளவு பெரிய கொலை தண்டனை கொடுக்க கூடாது, வேலியே பயிரை அளிக்க கூடாது, நீ காவல் தெய்வம், அதுவும் நம்மை வணங்க வருபவர்களை நாமே அடித்து கொல்லலாமா, தவறு செய்யாதே என்றார்.
அதற்கு சுடலை, அம்மா எனக்கு எல்லா நீதிகளும் தெரியும், எல்லா தர்மங்களும் தெரியும், நீ கொடுக்கும் தேங்காய் சில்லையும், பச்சரிசி சாதத்தையும் தின்று வயிறு நிறையவில்லை. நான் எவ்வளவு பசியில் இருந்தாலும் இங்கு வருபவர்களில் குணவன்களையும், நல்லவர்களையும் பார்க்கும்போது என் பசி மறந்து அவர்கள் என் பிள்ளைகளாக தெரிகின்றனர், அவர்களை, அவர்களுக்கு வரவிருக்கும் தீமைகளில் இருந்தும் துயரங்களில் இருந்தும் பிரித்து அவர்களை பாதுகாக்கிறேன். ஆனால், என்வயிறு நிறைந்து இருக்கும் போதும் கூட, துரோகிகளும் துஷ்ட தனமானவர்கள் என் கண்களில் பட்டாலே எனது வயிறு பசிஎடுத்து அவர்களை அழித்து தின்று விடுகிறேன். ஈசன் என்னை இப்படி படைத்தது விட்டார். நான் என்ன செய்வது என்றதுடன், அம்மையே உன்வருத்தம் எனக்கு புரிகிறது, ஆகையால், தினமும் உனக்கு மத்தியானம் உச்சிகால பூஜை நடக்கும்போது எனக்கு ஒரு சேவல் குடு, வெள்ளி கிழமையானால் ஒரு தீர்த்தம் வைத்து கொடு, மாதம் கடைசி செவ்வாய்க்கு ஒரு படுக்கை போட்டு குடு, வருடம் ஒரு தடவை உனது தேரோட்டத்துக்கு முன்னதா எனக்கு ஒரு ஊட்டு போட்டு குடு, அதன் பிறகு நான் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றார் சுடலை. பகவதி அம்மை சொன்னாள், அடேய் இது சிவகாம முறைப்படி பூஜை நடக்கும் திருத்தலம், இந்த சைவ பூஜையில் நீ இரத்தம் கேட்பது நியாயம் இல்லை, இஷ்டமானால் இரு, இல்லையெனில் இடத்தை காலிபண்ணு என்றார் அம்மை.
இனிமே இந்த அம்மாளிடம் அடங்கி போனால்தான் காரியம் நடக்கும் என்று எண்ணிய சுடலை, அம்மா நான் கேட்பதற்குரிய பலியை நீ கொடுக்க மறுத்தாலும், வெள்ளியும் செவ்வாயும் எனக்கு விடுமுறை கொடு, எனக்கு வேண்டிய உணவுகளை நான் மயானத்தில் சென்று தின்று வயிறை நிறைத்து கொள்வேன் என்றார் சுடலை. அதற்க்கு அம்மாளும் சரியென்று சம்மதித்தார். அன்றையிலிருந்து சுடலை வெள்ளியும் செவ்வாயும் மயான வேட்டை ஆடிவருவது வழக்கம். நாட்கள் கடக்கிறது.
அதே சமயம், அதே அந்த மலையாளத்தில், நந்தன் புனலூர் சலியர்கரை நான்கு சாலியர் தெருவிலே, அந்த காலத்தில் 1008 வீட்டு புலையன்மார்கள் வசித்து வந்தார்கள். இந்த புலையன்மார்களுக்கு எல்லாம் ஒரு தலைவன், அவன் பெயர் காளிப்புலையன். இவர்களின் தொழில் மாந்திரீக தொழில். அதுவும் சாதாரணப்பட்ட மாந்திரீகம் அல்ல, அந்த புலையன்கள், வானத்தையே வில்லாக வளைத்திடுவார்கள், மணலிலேயே கயிறு திரித்திடுவார்கள், அவர்கள் உரலுக்குள் மையை வைத்து அதை இந்த உலகமெல்லாம் சுற்ற விடுவார்கள், அது உலகமெல்லாம் சுற்றி வீட்டுக்கு வரும், அம்மிக்குள் மையை வைத்து அதை இந்த அகிலமெல்லாம் பறக்க வைப்பார்கள், அது அகிலமெல்லாம் பறந்து வீட்டுக்கு வரும், சுளவு தட்டியையும் தொண்ணூறு காதவெளிக்கு பரக்கவிடுவார்கள், அது ஒற்று பார்த்து வரும், கரையாத பொருட்களையும் கரைக்க வல்லவர்கள், கனத்த உருக்களையும் அளிக்க வல்லவர்கள். இந்த மந்திரவாதி காளிப்புலையனின் மனைவி காளிப்புலச்சி.
இரண்டுபேருக்கும் வெகு நாளாக குழந்தை இல்லாது போக, அவன் மனைவி காளிப்புலச்சி, நந்தன் புனலூரில் ஒரு பாதாள கண்டி ஈஸ்வரி என்ற ஒரு அம்மன் கோவில், அங்கு பொய் 48 நாள் ஒரு மண்டல காலம் விரதம் இருந்தாள். ஒரு காகமானது அக்கிரகாரதிலே, அவ்வையார் விரதமிருந்த ஒரு ஆச்சி வீட்டிலிருந்து ஒரு மா கொளுகட்டையை கொண்டுவந்து, கரமேந்தி தவசிருந்த காளிப்புலச்சி கையில் போட்டது, கோவிலில் கிடைத்தால் பிரசாதமாக நினைத்து அதை எடுத்து உண்டாள் காளிப்புலச்சி. அன்று முதல் அவள் கருவுற்று பத்தாவது மாதம் பெண் குழந்தை பிறந்தது. தவமிருந்து கிடைத்த குழந்தை ஆதலால் சந்தொசமுற்ற காளிப்புலையன், ஊர்மெச்ச விழா எடுத்து கொண்டாடினான், அவனுக்கு குலதெய்வம் இசக்கி. மாப்பிண்டதிலே அவதாரம் ஆனதால், இரண்டயும் இணைத்து மாவிசக்கி என்று குழந்தைக்கு பெயர் நாமம் சூட்டினான். அந்த குழந்தை இனிதே வாளர்ந்தது. ஐந்து வயதிலிருந்து அறிய கலைகளை படிக்கவைதான். பதிமூன்றாம் வயதிலே பருவமடைந்தாள் மாவிசக்கி. அவள் அழகை உவமானம் சொல்ல யாராலும் முடியாது. ஊரே மயங்கும் பேரழகு, மகளை பார்த்த காளிப்புலையன் யோசித்தான், நம் மகளின் அழகுக்கு நிகரான நகைகள் பூட்டி அவளை அலங்காரம் செய்ய ஆசைப்பட்டான், ஆனால், அவன் நியாயமான முறையிலே ஆசைப்பட வில்லை, அவனது மாந்திரீக புத்தி, அவனை கெடு வழியில் செல்ல தூண்டியது,
அஞ்சணமை என்று ஒரு மை, அதை கண்ணில் இட்டால் பூமியிலிருக்கும் புதையல் கூட புலப்ப்படுமாம். அந்த அஞ்சணமையை எடுத்து வெற்றிலையில் தடவி பார்க்கிறான், அங்கே, கொட்டாரக்கரை, பகவதி வாசல், தெற்குமேட்டுகலுங்கு, திருவாத்தி மூட்டுக்குள்ளே ஏழு அண்டா திரவியம் அசையாமல் இருக்ககிறது. அன்று வெள்ளிக்கிழமை ஆகையால் சுடலை மயான வேட்டைக்கு சென்று விட்டார். இதுதான் நல்ல தருணம், அந்த திரவியத்தை களவெடுத்து, வந்து மகளுக்கு நல்ல அணிகலன்கள் செய்ய வேண்டும் என்று மாந்த்ரீக சாலத்தோடு பெரும்புலையன் கிளம்புகிறான். மாந்த்ரீக வேலையோடு கொட்டாரக்கரை பகவதி வாசல் வந்து, ஏழு அண்டா திரவியத்தில், ஒரு அண்டாவை பெரும் புலையன் கொள்ளை போட்டு வீட்டுக்கு வந்தான்.
மயானம் போன சுடலை கலுங்குக்கு வந்தார், ஏழு அண்டா திரவியத்தில் ஒரு அண்டா காலியாக இருக்க கண்டார். பகவதியிடம் வந்தார் சுடலை, அம்மா நான் காவல் காத்த திரவியத்தை எவனோ களவெடுத்து சென்றுவிட்டான், யார் அவன், அவன் திசையை சொல்லு என்று கேட்டார் மாயாண்டி சுடலை. அதற்கு அம்மாள் சொன்னாள், மகனே திரவியம் போனாலும் போகட்டும், அவனை பற்றி கேளாதே என்றார். ஏனென்றால் அவன் காலனை விட கொடியவன், கொடிய பாவி அவன், மகனே, நந்தன் புனலூர் சலியர்கரை நான்கு சாலியர் தெருவிலே, 1008 வீட்டு புலையன்மார்கள் வசித்து வருகிறார்கள், அந்த புலையன்மார்களுக்கு எல்லாம் அவனே தலைவன், நமது திரவியத்தை களவெடுத்ததும் அவனே என்றாள் அம்மை. மேலும், பாம்பு கடித்து இறந்தார்கள் என்று யாரும் கண்டதே கிடையாது அவன் வாழும் தெருவிலே, தேள் கொட்டி அழுதவர்கள் அங்கு யாரும் இல்லை, அவர்களை எதிர்த்து சென்றவர்கள் திரும்பி வந்த சரித்திரமே இல்லை, அவளவு கொடிய மாந்திரவாதிகள் இருக்குமிடம், ஆகவே நீ போனால் உன்னையும் பிடித்து அடைத்து விடுவான், ஆகவே போக வேண்டாம் மகனே, போனது போகட்டும், நீ உள்ளே இரு என்றார் அம்மை. சுடலை கேட்கவில்லை, அம்மா, என்னுடைய காவலிலிருந்து ஒருவன் களவெடுத்து சென்ற பிறகும் நான் ஏனென்று கேட்க்காது இருப்பது முறையா. நீ ஒரு வார்த்தை சொல்லு. மகனே சுடலை சென்று வா, வென்று வா என்று ஒரு முறை ஆசி கொடுத்து அனுப்பு, வென்று வருகிறேன். எப்படி தெரியுமா ?
கொள்ளை கொண்டு சென்றவனை கொடியருத்து வாறேனம்மா, களவெடுத்து சென்றவனை கருவறுத்து வாறேனம்மா, மங்கவாய் வாயதிலே மண்ணள்ளி போட்டுவாரேன் எனக்கூறி, பலி வேகம் கொண்டு கொடும் சப்தமிட்டார். எல்லாம் கவனித்த அம்மாள் பார்த்தாள், இனி இவனை அடக்க முடியாது என்று உணர்ந்து, சென்று வா மகனே சென்று வா, புலையனை வென்று வா மகனே வென்று வா என்று வாழ்த்தி நல்ல விடை கொடுத்து, மந்திரித்த வல்லயத்தையும் கொடுத்து, திருநீறையும் கொடுத்து, சுடலையை, பகவதி அம்மையே அனுப்பி வைத்தாள்.
அங்கிருந்து வீர விகார வேசத்தோடு வந்த சுடலை அவன் வீடு நெருங்கியதும், யோசித்தார், இதற்கு அந்தப்புறம் நாம் இந்த சொருபத்தோடு செல்ல கூடாது. அந்த திருட்டு பயலை வேசம் போட்டுத்தான் மோசம பண்ணவேண்டும் என்று முடிவெடுத்தார். அதன் படியே ஒரு பாம்பாட்டி சித்தன் உருவம்பூண்டு, மகுடி எடுத்து ஊதினார், ஏகப்பட்ட பாம்புகள் வந்து கூடியது. அந்த ஆயிரம் பாம்பு கூட்டத்தில் ஒரு நாக பாம்பையும் ஒரு நல்ல பாம்பையும் பிடித்தார். பல தலை உடையதை நாகமென்றும், ஒரு தலை உடையததை நல்ல பாம்பு என்றும் சொல்வர். அந்த இரண்டு பாம்புகளையும் ஒரு கூடையில் அடைத்து, கூடையை தலை மேல் வைத்து, புலையர்களின் உயிரை கவரக்கூடிய ஒரு கூற்றுவனைபோல சுவாமி நடந்து வருகிறார். அப்படியே நான்கு சாலியர் தெருவை அடைந்த ஸ்வாமிகள், இங்குதான் பாம்பு வித்தை காட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படியே பாம்புகளை வெளியே எடுத்து , ஆட விட்டு பல கொடிய வேடிக்கைகளை செய்கிறார், அந்த வேடிக்கைகளை புலையன்மார்கள் பலர் வந்து பார்த்தாலும் காளிப்புலையன் வீட்டிலிருந்து எவரும் வரவில்லை. பார்த்தார் சுவாமி, வேடிக்கை காட்டுவது இப்போது முக்கியமில்லை, காளிப்புலையன் வரவில்லை என்றால் என்ன, நாமே அவன் இடத்திற்கு செல்வோம் என நினைத்த சுவாமிசுடலை, அந்த உருவை மாற்றி, ஒரு வயதான கிழவனைப்போல உருவெடுத்தார், அந்த உருவமானது, பழுத்த உடல் வெளுத்த தலையுமாகவும், உடலில் வெடித்த வெள்ளரி பழம் போன்ற வரிகளும், அந்த வரிகளில் வெள்ளி ஊசி போன்ற புழுக்களும் நெளிய, ஒரு வெறுக்கும் படியான உருவத்துடனும், காவி உடையோடு கழுத்திலே உத்திராட்சம், நெற்றியிலே விபூதி, ஒரு கையில் ஊன்றுகோல், மறு கையிலே திருவோடுமாக, தள்ளாடி தள்ளாடி, நடை நடந்து சுவாமி அந்த மாந்திரவாதியின் வீட்டு வடக்கு வாசலில் வந்து நின்றார்.
மாந்திரவாதி காளிப்புலையன் வீட்டில், அங்கு ஏழு அறைக்குள்ளே காளிப்புலையன் மகள் மாவிசக்கி தோளியர்களுடன் தன்னை தானே அலங்காரம் செய்து, அங்கு ஆடலும் பாடலுமாக மகிழ்ந்து கொண்டிருந்தாள். தாயும் தந்தையும் வெளியே சென்றிருந்தனர். உடனே சுவாமி வடக்கு வாசலில் நின்று பிச்சை கேட்பதுபோல, வீட்டில் யாரம்மா இருப்பது, ஒரு ஏழை ஆண்டி வந்திருக்கிறேன், கொஞ்சம் அன்னம் தாருங்கள் என்றார். அவளோ, யாசகம் கேட்பது சிவனடியார் என்று நினைத்து கையிலே கொஞ்சம் திணையை அள்ளிக்கொண்டு வந்தாள் மாவிசக்கி. இவள் வடக்கு வாசலில் வந்தால் சுவாமி தெற்கு வாசலில் நின்று, மீண்டும், அடியே பிட்சை போடு என்பார். மாவிசக்கி அங்கு சென்றால் உடனே அடுத்த வாசலுக்கு செல்வார். இப்படியே அவளை அலைக்கழித்தார். இதனால் கோபமடைந்த மாவிசக்கி சுடலையை பார்த்து, அடேய் கிளட்டுப்பயலே, மரியாதையாக தருவதை வாங்கிவிட்டு வீட்டைவிட்டு ஓடிவிடு என்று சத்தமிட, வந்தார் சுடலை, பெண்ணே நான் பிச்சைக்காக வந்தேன் என்று நினைத்தாயா, இல்லை, உனது அப்பனுக்கும் எனக்கும் ஒரு கணக்கிருக்கிறது, அதை முடிக்கவே நான் வந்தேன் என்று கூறி, மாரியாதை குறைவாக பேசினால் உன்னையும் இல்லாது அளித்திடுவேன் என்றார். அத்துடன், உன்னிடம் பேசி பேசி நாவறண்டு போனது கொஞ்சம் தண்ணீர் கொடு என்றார். அதற்க்கு மாவிசக்கி, அடேய் கிழவா நான் யாரென்று அறியாது பேசுகிறாய், அத்துடன், உனக்கு தர தண்ணீரும் இங்கு இல்லை, உனக்கு தண்ணீர் தரும்படியான இழிவான ஆட்களும் இங்கு இல்லை என்று அகங்காரமாக சொன்னாள். உடனே செஞ்சுடலை அவளை பார்த்து, அடி மாவிச்க்கி, உன் அப்பனுக்கு பசும பாலை கறந்து கொண்டு வந்து அலமாரியில் வைத்திருக்கிறாய், என்னிடமோ உனக்கு தர ஒன்றுமில்லை என்கிறாய், அது போக என்னை மிக இழிவாக பேசிவிட்டாய். கள்வனுக்கு பிறந்த நீயே இழிவானவள். ஆகவே இன்னும் எட்டு நாட்களுக்குள் உன்னை கன்னிகழித்து உன் அகங்காரத்தை அழித்து, அத்துடன், உன்னையும் உனது அப்பனையும் அவன் குடியையும் கருவறுத்து அளிப்பேன், இது தவறினால், நான் மயானத்தில் உருவெடுத்து கைலாசத்தில் வளரவும் இல்லை, என் தாய் பார்வதி தேவியாம் பேச்சியும் இல்லை, என்பெயர் சுடலையும் இல்லை என்று மார்தட்டி சபதம் வைத்த மாயாண்டி சுடலை மாயமாக மறைந்துவிட்டார்.
மாலை நேரம் சென்றதும் காளிப்புலையன் வீட்டிற்கு வந்தான். நடந்தது அனைத்தையும் சொன்னாள் மாவிசக்கி. அப்படியா என்வீட்டிலே வந்து ஒருவன் கருவருப்பானா, பார்கிறேன் நான் என்று கூறிய காளிப்புலையன், மை போட்டு பார்க்கிறான், சுடலை என்று அறிந்தான். திரவியதிற்கு காவல்காரன் வீடு தேடி வந்து விட்டான் இனி நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று புரிந்துகொண்ட காளிப்புலையன் காவலும் கட்டுமாக இருக்க, அதே அந்த மலையாளத்திலே ஆலடிப்புதூரிலே பளியன்மார்கள் எல்லாம் கூட்டு பங்காளியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் காக்காச்சி மலை தாண்டி கண்ணாடி சோலைக்குள்ளே, அக்காலத்திய முறைப்படி விவசாயம் செய்தார்கள். செய்த விவசாயம் அங்கே பயிரில் பலன் பிடிக்கும் நேரம். அதே நேரத்தில் சுடலை தான் போட்ட சபதத்தை முடிக்கவேண்டும் என்று, எட்டாம் நாள் சாமம், அந்த புலையனின் கோட்டைக்கு வந்தார். அங்கு ஏழு அறைக்குள்ளே எரும்ம்பு ரூபம் எடுத்து மாவிச்க்கியின் அறைக்குள்ளே நுழைந்து, மாவிசக்கியாளை கொண்ட கணவனைப்போல கூடவே படுத்திருந்து கற்பழித்தார், கற்பழித்து முடிந்ததும் வெளிப்பட்டார் சுடலை. அடுத்து நேராக, காக்காச்சி மலை கண்ணாடி சோலைக்குள்ளே மத யானை போல நுழைந்து அனைத்து பயிர்களையும் அடி முதல் வேர்வரை சர்வநாசம் செய்து அனைத்தயும் அழித்தார். அழித்துவிட்டு அப்படியே கொட்டாரக்கரை பகவதி வாசலுக்கு வந்தார்.
பளியன்மார்கள் மறுநாள் விவசாயத்தை பார்க்க வந்தார்கள். சோலையே அழிந்து போனது கண்டு திகைத்தவர்கள் புலையனிடம் ஓடிவந்தார்கள், நடந்ததை தெரிந்துகொண்ட புலையன், காரணம் கண்டுபிடிக்க மையிட்டு பார்த்தான், அங்கேயும் ஆடியது சுடலைதான் என்பதை கண்ண்டான். உடனே சுடலையை அடக்க என்ன வழி என்று அவனது மாந்திர சக்திவளியாக ஆராய்ந்து பார்க்கிறான். அவனது மாந்திர குறி சுடலை கேட்பதை கொடுத்தால் அவரை அடக்கலாம் என்று சொல்கிறது, சுடலையை அடக்கி அடைக்கவில்லை என்றால் பெரும் இழப்புக்கள் நேரும், ஆகையால், எப்படியாவது சுடலை கேட்பதை கொடுத்து அவரை அடக்கி நிலை கட்டநினைத்தான் புலையன். ஆகையால், மீண்டும் வெற்றிலையில் மை போட்டு சுடலையை அழைக்கிறான். மையில் சுடலைவந்தார். ஏய் கீழ் நெறி புலையனே, என்னை இப்போதுதான் அறிந்தாயா, நீ இல்லாததால், உன் மகளை கற்பழித்து, உன்னுடைய சோலை நடுவங்களையும் அளித்தது நான்தான், அடுத்து உன்னையும் அளிப்பேன் என்று வெறி கொண்டு சொன்னார். சுடலையின் சக்தி அறிந்து பயந்து போன புலையன், சுடலை எதை கேட்டாலும் அதைகொடுத்து அவரை எப்படியாவது அடக்க நினைத்து, என்ன நீ கேட்டாலும் தருகிறேன், உன் கோபம தீர நான் என்ன தரவேண்டும், எதை கேட்டாலும் தருகிறேன் என்றான். அதற்க்கு சுடலை, நீ யாருக்காக எனது கட்டு காவலை மீறி எனது அம்மையின் திரவியத்தை களவெடுத்தாயோ, அந்த மாவிசக்கியை கருவோடு கொடிபுடுங்கி எனக்கு காபூசை கொடுத்தால் உன் கட்டுக்குள் அகப்படுவேன், இல்லையென்றால் அடுத்து உன்னையும் அழிதிடுவேன் என்றார்.
எப்படியோ தான் தப்பினால் போதும் என்று எண்ணிய சிறு குணத்தான் புலையனவன், மாவிசக்கியை, அந்த காக்காச்சி மலை கண்ணாடி சோலைக்குள்ளே கொண்டு வைத்துக்கொண்டு, ஏழு பரண் போட்டு, ஏழுவிதமான பலிகளை கொடுத்தான். சுடலையோ, டேய் புலையனே சொன்னது போல உன் மகளை பழிபோட்டு கொடு இல்லையென்றால், நீ நினைத்தது நடக்காது என்று கர்ஜிக்க, தான் பெற்ற மகளென்றும் பாராமல் அந்த சண்டாளப்பாவி புலையன், சூல்கொண்ட ஒரு பசுவை கிடதுவதுபோல பரணின்மேல் கிடத்தி, கை கால்களை கட்டி, அவளது வயிற்றை கிழிக்க ஆயுதத்தை கையில் எடுத்தான்.
அப்போதுதான் தான் சாகப்போகிறோம் என்று மாவிச்க்கிக்கு தெரிந்தது. அட சண்டாளப்பாவி புலையனே, அருமை பெருமையாக வளர்த்து, எங்கோகண்ட பேய் படைக்கோ என்னை பலிகொடுக்க வந்துவிட்டாயே என்று அளுத்து புலம்பி பதறினாள். அவளின் பதரலை பார்த்த சுடலை, யாரும் அறியாது நொடி வேளையில் அவளின் மனதிற்குள் புகுந்து, பெண்ணே நீ முற்பிறவியில் செய்த பலன் படி இந்த கள்வனுக்கு மகளானாய், பெற்றோர் செய்யும் தவறுகளுக்கு பிள்ளைகளும் பதில் சொல்லவேண்டும், என் அம்மையின் பொருளென்று அறிந்தும் நீ அதை அனுபவிக்க துணிந்தாய், அதனால் இப்பிறவியிலும் தவரிளைத்தாய், ஆகவே எனது சட்டப்படி இவைகளுக்கு நான் வழங்கும் கூலி இதுவே என, நெறி புரிவித்து அதே நொடியில் வெளி வந்தார்.
வெளிவந்த சுடலை, டேய் வேளை தவறுகிறது என்று ஓங்கார சப்தமிட, தான் தப்பினால் போதும் என்று எண்ணிய புலையன், தான் பெற்ற மகளென்றும் பாராமல் மாவிசக்கியின் வயிற்றை கிழித்து, மாவோடு கருவோடு பிள்ளையை பிடுங்கி, தலைவாழை இலையில் வைத்து சுடலைக்கு வாரிக்கொடுத்தான். அதை ஏற்ற சுடலை அவன் சொல்லுக்கு கட்டுப்படுவது போல் அவன் சிமிளுக்குள்ளே நுழைந்தார். புலையன் சுடலையை சிமிழோடு ஒரு தாமிர தூருக்குள்ளே வைத்து குளத்திற்குள் புதைத்தான். அடுத்து அதே குளத்திற்கு புலையனின் மனைவி தண்ணீர் எடுக்க வந்தாள். தூரை வெடித்து சிமிழோடு வெளியான சுடலை புலையனின் மனைவியின் தண்ணீர் குடத்தினுள் சிமிளாக புகுந்து கொண்டார். குடம் வீட்டுக்குள் வந்ததும் குடத்திலிருந்து துள்ளி சிமிளாக வந்து அருகிலிருந்த புலையனின் இடது கால் தொடையில் அமர்ந்து கொண்ண்டார். பயந்து போன புலையன், இவன் நம்மை இன்னும் விட வில்லையே என்று நினைத்து, சிமிளை உரலில் இட்டு இரும்பு உலக்கையால் இடித்தான், சிமிழ் உடைந்து வெளிப்பட்ட தேரடிமாடன் மாயாண்டி சுடலை, வல்லயமும் தடியோடு வீர வேக உருவோடு நின்று, அந்த புலையனை ஒரே அடியாக அடித்து ஊட்டியை முறித்து உதிரத்தை குடித்து அவனை அளித்து, அவனது மனைவி காளிப்புலைச்சியையும் அளித்து, அந்த திரவியத்தை எடுத்து, பழையபடி கொட்டாரக்கரை, பகவதி வாசலுக்கு கொண்டு வந்து பகவதி அம்மையிடம் ஒப்படைத்தார்.
அம்மையிடம் ஆசிவாங்கி, மீண்டும் நம் நாட்டிலுள்ள எல்லா தீர்த்தங்களும் ஆடி, 1008 சிவ ஸ்தலங்கள், 108 திருப்பதிகளையும் மாயாண்டி சுடலை வணங்கி, எல்லா தெய்வங்களையும் தொழுத சுவாமி மாயாண்டி சுடலை ஆண்டவர், மீண்டும் தென்னாடு வந்து தென்நாட்டில் குற்றாலம் வழியாக சீவலப்பேரிக்கு வந்து சீவலப்பேரி சுடலையாக குடி கொண்டார். அங்கிருந்து பிடி மண் மூலம், வள்ளியூர் அருகே சிறுமளஞ்சியில் ஒத்தப்பனை சுடலை ஆண்டவராகவும், ஆறுமுகமங்கலத்தில் ஆறுமுகமங்கல சுடலையாகவும், மற்றும் தென் நாடு முழுக்க பல இடங்களில் சுடலை ஆண்டவன் பரந்து விரிந்து வீற்றிருந்து இன்று தன் ஆட்சியை நடத்தி வருகிறார். தன்னை நம்பிவரும் பக்தர்களுக்கு நல்லருள் அருள் பாலிக்கிறார்.
நல்லோர் மனதை நடுங்க செய்பவர்கள், நட்டாற்றில் கையை நழுவ விடுபவர்கள், வரவுபோக்கிற்கு வழி அடைப்பவர்கள், வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பவர்கள், கற்பு வழி நிற்கும் கன்னியரை அழிப்பவர்கள், பொது சொத்தை கொள்ளை அடிப்பவர்கள், பதவியை பயன்படுத்தி பகட்டு வேஷம் போடுபவர்கள் இன்னும் பல ஆயிரமாயிரம் நரித்தனம் செய்யும் நயவஞ்சக மனிதர்களை கழுவேற்றி காவுகொள்கிறார். கண்ணீருடன் சுடலையிடம் முறையிடுவர்களுக்காக இன்றும் துரோகிகளை பழிதீர்த்து நல்லவர்களை காப்பாற்றி வருகிறார். சுடலை ஆண்டவன் சன்னதியில் பொய் சத்தியம் செய்பவர்களின் குடும்பத்தின் தலைமுறையும் பூண்டற்று போய்விடும். தனக்கு ஓர் துயர் நேர்ந்துவிட்டது என்று கண்ணீருடன் எந்த அப்பாவியும் முறையிட்டால் சுடலை சும்மா விடமாட்டார் என்பது வெறும் கதையல்ல ரத்தவரிகளால் எழுதப்பட்ட சரித்திரமாக இன்றும் நிலைத்து நிற்கிறது. சுடலை ஆண்டவருக்கு ஜாதி பேதமின்றி யார் வேண்டு மென்றாலும் பூஜை செய்யலாம். அந்தணர்கள் உட்பட அனைத்து ஜாதியிலும் பூசாரிகள் உண்டு. பொதுவாக சுடலை நயவஞ்சகரை அழிப்பவராகவும் பொய் சத்யவாதியை வதைப்பவராகவும். தீய மந்திர சக்திகளை ஒழிப்பவராகவும் இருக்கிறார், பல எதிரிகளுக்கு ஆட்பட்டு வாழ்க்கையில் துயரப்படுபவர்கள் சுடலையை வணங்கினால் சத்ருகள் நாசமடைந்து சந்தோஷமான வாழ்வை பெறுவார்கள்.